Sunday, October 12, 2008

சுடாத சுடர்!

ஒரு முறைச் சொல்..!
ஓங்கிச் சொல்..!!

மதியையும் மனதையும்
இணைத்து
ஒருமித்துச் சொல்...

மதமில்லை என்னில்..!

ஆம்!
மதத்தால்
மகிழ்வில்லை
இம் மண்ணில்-எனவே
இனி
மதமில்லை என்னில்..!

தீபம் வேறு..
தீப் பந்தம் வேறு!

ஒளிர்வதில்
மிளிர்வது தீபம்
எஞ்சியது விளக்கு
அஞ்சுவது தீ...

நீ
அகலில் மிளிரும்
தீபமாய் இரு!
காற்றில் தாவி
காட்டுத் தீயாகாதே..!

மதம் கொண்டு
துவம்சம் தீர்க்கும்
யானை குணம்
கொண்டோன் அல்ல நீ..!

மனிதா..!
மதம் ஏன்..
மாசு ஏன்...

சினத்தை தூண்டும்
மதங்கள் இடித்து
மாசு அகற்றுவோம்..!

அறம் கூறும்
அப்பை தெளித்து
நட்பை புகட்டுவோம்..!

வேதங்கள் சொல்லும்
நீதங்கள்
ஆயிரம் ஆயிரம்-அதில்
மதங்கள் பூசிய
வெளிப் பூச்சுக்களை
சுரண்டி எறிவோம்..!

இரண்டுங் கெட்டான்கள்
இடையில் வந்து
இடைச் செருகும்
போதங்களை
சுட்டெறிப்போம்..!

நட்பைக் கொண்டு
ஒன்றாய் நின்று
பகைமையை விரட்டி
சமத்துவத்தின்
பாலம் அமைப்போம்..!

புன்னைவனப்
பொய்கையாய்..
பூக்களை கொய்யாத
புது உலகம் படைப்போம்..!

அதில்
வெப்பமின்றி
வெளிச்சம் தரும்
சுடாத சுடர்
நீ..!

பாதச் சுவடுகள்.

பிறந்தவள்
பெண்ணெனவே..
தன்னினம் ஈனமென
தானீன்ற
தவக் குழந்தை
தனக்கே பாரமென...

நெஞ்சம் துளிர்த்த
ஈரம் துடைத்து..
நெல் மணியும்
கள்ளிப் பாலும்
வரப்போரம்
சுமந்துச் சென்றாள்..
தன் சேயழிக்கத்
தாயொருத்தி..!

அதே வயலில்
அவளின்
அதே சுவட்டில்
கால் பதித்து...

தன்
கண்ணிழந்த
குருட்டுக் கன்றுக்கு
கால் நடக்கக
கற்றுத் தர..
தன்
வால் கொடுத்து
நடத்திச் சென்றதோர்
தாய் பசு...

தாணியங்களை
தானுண்டு..
தன் கன்றுக்கு பாலூட்ட..!

நிலையான நினைவுகள்!

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது..!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடு போட
துரத்தித் திரிந்தோம்...

பிஞ்சு விட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...

கொத்தும் கிளியை
விரட்டி விட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...

தீப் பெட்டிகளில்
நூலினைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...

நாம்
துள்ளிக் குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள்
இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்..!

அதனால்தானே
உன் தொழியை எனக்கும்
என் நண்பனை உனக்குமாய்
வாழ்க்கைத்
துணையாக்கிக் கொண்டோம்..!

Saturday, October 11, 2008

மாய(சு)தந்திரம்.

விடுதலை கால
தியாகிகளே..

நீங்கள்
பெற்று தந்த சுதந்திர
கொடியை
நாங்கள்
விண்ணில் பறக்க
செய்யும்
இன்று மட்டும்..

ஏன்
உங்கள் ஆத்ம
கொடிகளை அரை
கம்பத்தில்
பறக்கச் செய்கிறீர்கள்..!!
--------

விடுதலை
தருவதற்காகவே
சில நிமிடம்
தன்னில்
சிறை வைத்திருக்கின்றன
மலர்களை
தேசிய கொடிகள்...

கொடுப்பதற்கு முன்
வதைத்துவிட்டு
கொடுத்து சென்ற
வெள்ளையனை போன்றே..!!

ஆத்மா...!

பொய்யான பூமியிலே
புரியாமல்
பிறந்திட்டாய்-உன்
பூத உடல்
போய் சேரும்
நாளதையும் மறந்திட்டாய்..!

சதையுண்ணும்
செம்புழுக்கு சரீரத்தை
வளர்த்திட்டாய்-இவ்
உண்மைதனை
அறியாத்தான்-உன் அன்னை
உனை ஈன்றிட்டாள்..!

மண்ணுலகின்
புகழென்னி வின்னிலேயும்
பறந்திட்டாய்-உன்
பேராசை காரணத்தால்
சொத்ததையும்
சுமந்திட்டாய்..!

சொப்பனத்தில்
நீ நிறைந்து
சுதந்திரமாய் திரிந்திட்டாய்-சொற்ப
வாழ்வு ஆயுள்தனை
சிகரமென
நினைத்திட்டாய்..!

உலக உறவினிலே
நீ மிதந்து
உல்லாசத்தில்
உறைந்திட்டாய்-நீ
உறங்கப் போகும் நேரமதை
உண்மையிலே மறந்திட்டாய்...!

நாட்டின் வளம்..(நட்பும்,நல்லுறவும்)

ஆற்றங்கரை ஆல விழுதின்
தூளியாட்டத்தில்
தூக்கி விட
தோள் தந்ததில்
துவங்கிற்று
எங்கள் தோழமை..

ஆற்று மணலில்
ஊற்று பறித்து..
கலங்கள்களை
கையால் இரைத்து
முத்தாய்...
தெளிந்த நீரில்
முகம் கண்டோம்
முழு நிலவின்
முதல் பிறையாய்...

காலை பொழுதின்
காணிக்கையாய்..
புல் வெளியின்
உச்சி முகர்ந்த பனிப்பூக்கள்
பாதம் தொட..
சில்லிடும் பரவசத்தில்
சிலாகித்து சிறகடித்தோம்
நட்பாய்..

மாமர அணிலோடும்..
மரங்கொத்தி கிளியோடும்..
மாம்பூவிடை வடுவோடும்..
அதிலாடும் காற்றோடும்
கலந்து கதை பேசி
நட்பின் மொழியறிந்தோம்...

மதம் மறந்து
இருபாலின் இனம் மறந்து
அகத்திரை இடைவெளி க்ளைந்து
நட்பின்பால் இறுகினோம்
நட்பே பாலாய் பருகினோம்...

திருவிழா காலங்களில்
பெரும் விழா எமதாகும்.
நடப்பதெல்லாம்
மதச் சடங்கு..
நட்பாய்-அதில்
எம் பங்கு பல மடங்கு...

அம்மனுக்கு அர்ச்சணையாம்
பூ பறிக்க
எனை அழைப்பாள்
அகம் மகிழ துணை செல்வேன்..

கார்த்திகை திருவிளக்காம்
நெய் அகலில் அவள் வார்க்க
அதில்
தீபவொளி ஏற்றிடுவேன்...

தை திருநாள் வந்துவிடின்
இனிமை பொங்க
வலம் வருவோம்-இனிய
கரும்பு சுவையுடனே...

என் வீட்டு
பிரார்த்தணைகளில்
அவள் கலந்து..
கையேந்தி வழி மொழிவாள்
தலை போர்த்தி
வழிபடுவாள்...

அயோத்தியில் மசூதி
அரக்கர்களால் தகர்க்கபட்ட
இருள் செய்தி அறிந்திடவே
உயிர் துடிக்க வலி கண்டாள்
மணம் இடிந்த நிலை கொண்டாள்...

போர் தொடுக்கும்
மணங்களை வென்று
பூ தொடுப்பதே
நட்பின் வேதம்...

அகிலத்தின் அகராதியில்
ஆணும் பெண்ணும்
பஞ்சும் நெருப்புமாம்..

நனைந்த பஞ்சும்
அணல் கக்காத
அகல் விளக்குமாய்..
பக்கத்தில் இருந்தும்
பத்திக் கொள்ளவில்லை நாங்கள்...

திட்டு திட்டாய்
தேங்கி கிடக்கும்-காம
கருங்குட்டைகளுக்கு அப்பால்..
கட்டுடைந்த கடலாய்
எங்கள் நட்பின் சமுத்திரம்...

வலம் வரும்
நவ கிரகங்களுக்கெல்லாம்
சிகரமாய்...
வானத்தின் கூரையாம்
எங்கள்
நட்பின் உயரங்கள்...

நாங்கள் நடையால்
அளந்த மண்ணும்..
நட்பால் பதித்த
கால்சுவடும்..
பாறையில் பொறித்திட்ட
காரை எழுத்துக்களும்...
காலத்தால் அழியாமல்
கவி பாடும்..
நட்பே உயர்வென
கதை பேசும்..!

மத இன
பேதங்களுக்கு தாழிட்டு,
நட்புக்கு..
தடம் அமைக்க
தளம் காண்போம்..
நாட்டின் உயர்வுக்கு
வழி காண்போம்..!