Sunday, November 9, 2008

பிரிவு

வாழ்வின் விடியலை
நோக்கி
விரைந்திட்ட நாங்கள்
இன்று
கும்மிருளில்
சிக்கி தவித்தபடி...

வசந்தத்தின் வருகையை
நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில்
நிம்மதியை தொலைத்தபடி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள்
வாழ்க்கை பயணம்...

நஞ்சென்று நெஞ்சுணர்ந்தும்
தீயென்று சுயமறிந்தும்
நலமென்று நகர்கின்றோம்
நாடோடிக் கும்பலாய்...

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும்
கடந்து..
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்...

மாக் கோலத்தில்
புன்னகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல்
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெறுமனே பூத்திருக்கிறோம்...

தினம் தினம்
கானல் நீரில்
கனவு தோணியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிபோன
காகிதப் பூக்களாய்...

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கின்றோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே...

மணக் கோலம் கண்ட
மலர் மாலை வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக்கூட வாய்ப்பில்லாது
விடைப் பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து வளர்த்திட்ட
அன்னைக்கு
இறுதி கடமையை கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தன
பாதி வாழ்க்கை...

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின் கடைசி அத்தியாயமாய்
அல்லாடும்
மீதி வாழ்க்கை..!

சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்-என
கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்து
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்...

குடும்ப தொடர்பறுந்த
நாங்கள்...

உள்ளுக்குள்
உணர்வுகளை எரித்து
வெளியே
பிரகாசிக்கிறோம்--
ஒருவரிக் கவிதைகளாய்..!

Sunday, October 12, 2008

சுடாத சுடர்!

ஒரு முறைச் சொல்..!
ஓங்கிச் சொல்..!!

மதியையும் மனதையும்
இணைத்து
ஒருமித்துச் சொல்...

மதமில்லை என்னில்..!

ஆம்!
மதத்தால்
மகிழ்வில்லை
இம் மண்ணில்-எனவே
இனி
மதமில்லை என்னில்..!

தீபம் வேறு..
தீப் பந்தம் வேறு!

ஒளிர்வதில்
மிளிர்வது தீபம்
எஞ்சியது விளக்கு
அஞ்சுவது தீ...

நீ
அகலில் மிளிரும்
தீபமாய் இரு!
காற்றில் தாவி
காட்டுத் தீயாகாதே..!

மதம் கொண்டு
துவம்சம் தீர்க்கும்
யானை குணம்
கொண்டோன் அல்ல நீ..!

மனிதா..!
மதம் ஏன்..
மாசு ஏன்...

சினத்தை தூண்டும்
மதங்கள் இடித்து
மாசு அகற்றுவோம்..!

அறம் கூறும்
அப்பை தெளித்து
நட்பை புகட்டுவோம்..!

வேதங்கள் சொல்லும்
நீதங்கள்
ஆயிரம் ஆயிரம்-அதில்
மதங்கள் பூசிய
வெளிப் பூச்சுக்களை
சுரண்டி எறிவோம்..!

இரண்டுங் கெட்டான்கள்
இடையில் வந்து
இடைச் செருகும்
போதங்களை
சுட்டெறிப்போம்..!

நட்பைக் கொண்டு
ஒன்றாய் நின்று
பகைமையை விரட்டி
சமத்துவத்தின்
பாலம் அமைப்போம்..!

புன்னைவனப்
பொய்கையாய்..
பூக்களை கொய்யாத
புது உலகம் படைப்போம்..!

அதில்
வெப்பமின்றி
வெளிச்சம் தரும்
சுடாத சுடர்
நீ..!

பாதச் சுவடுகள்.

பிறந்தவள்
பெண்ணெனவே..
தன்னினம் ஈனமென
தானீன்ற
தவக் குழந்தை
தனக்கே பாரமென...

நெஞ்சம் துளிர்த்த
ஈரம் துடைத்து..
நெல் மணியும்
கள்ளிப் பாலும்
வரப்போரம்
சுமந்துச் சென்றாள்..
தன் சேயழிக்கத்
தாயொருத்தி..!

அதே வயலில்
அவளின்
அதே சுவட்டில்
கால் பதித்து...

தன்
கண்ணிழந்த
குருட்டுக் கன்றுக்கு
கால் நடக்கக
கற்றுத் தர..
தன்
வால் கொடுத்து
நடத்திச் சென்றதோர்
தாய் பசு...

தாணியங்களை
தானுண்டு..
தன் கன்றுக்கு பாலூட்ட..!

நிலையான நினைவுகள்!

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது..!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடு போட
துரத்தித் திரிந்தோம்...

பிஞ்சு விட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...

கொத்தும் கிளியை
விரட்டி விட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...

தீப் பெட்டிகளில்
நூலினைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...

நாம்
துள்ளிக் குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள்
இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்..!

அதனால்தானே
உன் தொழியை எனக்கும்
என் நண்பனை உனக்குமாய்
வாழ்க்கைத்
துணையாக்கிக் கொண்டோம்..!

Saturday, October 11, 2008

மாய(சு)தந்திரம்.

விடுதலை கால
தியாகிகளே..

நீங்கள்
பெற்று தந்த சுதந்திர
கொடியை
நாங்கள்
விண்ணில் பறக்க
செய்யும்
இன்று மட்டும்..

ஏன்
உங்கள் ஆத்ம
கொடிகளை அரை
கம்பத்தில்
பறக்கச் செய்கிறீர்கள்..!!
--------

விடுதலை
தருவதற்காகவே
சில நிமிடம்
தன்னில்
சிறை வைத்திருக்கின்றன
மலர்களை
தேசிய கொடிகள்...

கொடுப்பதற்கு முன்
வதைத்துவிட்டு
கொடுத்து சென்ற
வெள்ளையனை போன்றே..!!

ஆத்மா...!

பொய்யான பூமியிலே
புரியாமல்
பிறந்திட்டாய்-உன்
பூத உடல்
போய் சேரும்
நாளதையும் மறந்திட்டாய்..!

சதையுண்ணும்
செம்புழுக்கு சரீரத்தை
வளர்த்திட்டாய்-இவ்
உண்மைதனை
அறியாத்தான்-உன் அன்னை
உனை ஈன்றிட்டாள்..!

மண்ணுலகின்
புகழென்னி வின்னிலேயும்
பறந்திட்டாய்-உன்
பேராசை காரணத்தால்
சொத்ததையும்
சுமந்திட்டாய்..!

சொப்பனத்தில்
நீ நிறைந்து
சுதந்திரமாய் திரிந்திட்டாய்-சொற்ப
வாழ்வு ஆயுள்தனை
சிகரமென
நினைத்திட்டாய்..!

உலக உறவினிலே
நீ மிதந்து
உல்லாசத்தில்
உறைந்திட்டாய்-நீ
உறங்கப் போகும் நேரமதை
உண்மையிலே மறந்திட்டாய்...!

நாட்டின் வளம்..(நட்பும்,நல்லுறவும்)

ஆற்றங்கரை ஆல விழுதின்
தூளியாட்டத்தில்
தூக்கி விட
தோள் தந்ததில்
துவங்கிற்று
எங்கள் தோழமை..

ஆற்று மணலில்
ஊற்று பறித்து..
கலங்கள்களை
கையால் இரைத்து
முத்தாய்...
தெளிந்த நீரில்
முகம் கண்டோம்
முழு நிலவின்
முதல் பிறையாய்...

காலை பொழுதின்
காணிக்கையாய்..
புல் வெளியின்
உச்சி முகர்ந்த பனிப்பூக்கள்
பாதம் தொட..
சில்லிடும் பரவசத்தில்
சிலாகித்து சிறகடித்தோம்
நட்பாய்..

மாமர அணிலோடும்..
மரங்கொத்தி கிளியோடும்..
மாம்பூவிடை வடுவோடும்..
அதிலாடும் காற்றோடும்
கலந்து கதை பேசி
நட்பின் மொழியறிந்தோம்...

மதம் மறந்து
இருபாலின் இனம் மறந்து
அகத்திரை இடைவெளி க்ளைந்து
நட்பின்பால் இறுகினோம்
நட்பே பாலாய் பருகினோம்...

திருவிழா காலங்களில்
பெரும் விழா எமதாகும்.
நடப்பதெல்லாம்
மதச் சடங்கு..
நட்பாய்-அதில்
எம் பங்கு பல மடங்கு...

அம்மனுக்கு அர்ச்சணையாம்
பூ பறிக்க
எனை அழைப்பாள்
அகம் மகிழ துணை செல்வேன்..

கார்த்திகை திருவிளக்காம்
நெய் அகலில் அவள் வார்க்க
அதில்
தீபவொளி ஏற்றிடுவேன்...

தை திருநாள் வந்துவிடின்
இனிமை பொங்க
வலம் வருவோம்-இனிய
கரும்பு சுவையுடனே...

என் வீட்டு
பிரார்த்தணைகளில்
அவள் கலந்து..
கையேந்தி வழி மொழிவாள்
தலை போர்த்தி
வழிபடுவாள்...

அயோத்தியில் மசூதி
அரக்கர்களால் தகர்க்கபட்ட
இருள் செய்தி அறிந்திடவே
உயிர் துடிக்க வலி கண்டாள்
மணம் இடிந்த நிலை கொண்டாள்...

போர் தொடுக்கும்
மணங்களை வென்று
பூ தொடுப்பதே
நட்பின் வேதம்...

அகிலத்தின் அகராதியில்
ஆணும் பெண்ணும்
பஞ்சும் நெருப்புமாம்..

நனைந்த பஞ்சும்
அணல் கக்காத
அகல் விளக்குமாய்..
பக்கத்தில் இருந்தும்
பத்திக் கொள்ளவில்லை நாங்கள்...

திட்டு திட்டாய்
தேங்கி கிடக்கும்-காம
கருங்குட்டைகளுக்கு அப்பால்..
கட்டுடைந்த கடலாய்
எங்கள் நட்பின் சமுத்திரம்...

வலம் வரும்
நவ கிரகங்களுக்கெல்லாம்
சிகரமாய்...
வானத்தின் கூரையாம்
எங்கள்
நட்பின் உயரங்கள்...

நாங்கள் நடையால்
அளந்த மண்ணும்..
நட்பால் பதித்த
கால்சுவடும்..
பாறையில் பொறித்திட்ட
காரை எழுத்துக்களும்...
காலத்தால் அழியாமல்
கவி பாடும்..
நட்பே உயர்வென
கதை பேசும்..!

மத இன
பேதங்களுக்கு தாழிட்டு,
நட்புக்கு..
தடம் அமைக்க
தளம் காண்போம்..
நாட்டின் உயர்வுக்கு
வழி காண்போம்..!

Sunday, September 28, 2008

உளிச் சத்தம்

நேற்றை துலக்கு
இன்றை துவக்கு
உனை இயக்கு...
நேற்றைய வீழ்ச்சியில்
நாளைய வெற்றியை படி..!

தோல்வியை தொடு
துயரங்கள் தீண்டு
எழு...
மீண்டு வந்து
உயரங்கள் காண்..!

கேள்விகள் புணை
வேள்விகள் சிதை
சிந்தி...
புதிர்களை உடைத்து
விடைகளை உதிர்..!

ஆக்கங்களை அறிவால் ஆழ உழு
உணர்வுகள் விதை
வேர் விடு...
மனித இதயங்கள் இறங்கி
மலராய் சிரி..!

உன்னை முறை படுத்து
உன் செயல் நெறி படுத்து
செயல் படு...
விதியை வழி நடத்தி
விதியின் விதியாகு..!

மனதை தாழிடு
மதியை தூரெடு
பின் திற...
வாழ்வியலின் வரை படத்தில்
உன்னியல் தேடு..!

முன்னோருக்கு வழிபடு-அவர்தம்
பேதமைக்கு முரண்படு
புறப்படு...
சமூகம் பயணித்த
தேய் பழுதை சீர் செய்..!

மூடத்திரையை கிழித்தெறி
மடமை கூரையை பிரித்தெறி
வானம் பார்...
மூடிக்கிடக்கும்
உன் விடியலை திற..!

மதங்கள் அகற்று
மனிதம் பேனு
வேகம் விரை...
புராணங்களை புறக்கணித்து
புது வேதம் எழுது..!

சாதிகள் ஒழி
சமத்துவம் மொழி
பேதமழி...
புரட்சிகள் ஏற்றி
புதிய பாரதம் செய்..!

தாய் மண் நேசி
தலைவர்களை வாசி
மரபுகள் படி...
எத்தேசம் சென்றாலும்
இந்தியனாய் நில்..!

ஒற்றுமை ஓது
நட்பை போதி
பன்பை பழக்கு...
தீண்டாமைக்கு தீயிட
தீச்சட்டி எடு..!

சொல் அம்பு தவிர்
பகமை நான் அறு
சினவில் நிமிர்...
போர்களம் அழித்து-மனதை
பூவணமாக்கு..!

ஆயுதம் முறி
யுத்தங்கள் வெறு
அகிம்சை ஏந்து...
அம்புகள் தவிர்த்து...
அன்பால் வெல்..!

உன்னிலை மற
உள் மனம் திற
பொதுவாகு...
நான் என்ற அகம் கலைந்து
நாம் என்ற சுகம் உணர்..!

முழக்கங்கள் விடு
முயற்சியால் தொடு
நம்பிக்கை நடு...
நாளையை படைக்க
இன்றை நீ விதை..!

உன் கை நம்பு
உண்மை உன் பலமாக்கு
உழை...
வெற்றிச் சிகரத்தை
எட்டி பிடி..!

எளியோர் துயர் உள் வாங்கு
அவரிடத்தில் நீயாய் கொள்
தோள் கொடு...
உன் நலம் துறந்து
பிறர் நலம் பேனு..!

ஆழ் மனம் இறங்கு
மிருகங்கள் விரட்டு
செப்பனிடு...
மான்புகள் ஓங்க
மனிதங்கள் நடு..!

தேக்கங்கள் அகற்று
நீக்கங்கள் செய்
வழிந்தோடு...
கடந்து காட்டாறாகி
உய்ந்து ஊற்றாகு..!

சிந்தையை தீட்டு
விந்தைகள் செதுக்கு
தீயவை சிதை...
சிற்பி நீயாய் சிற்பம் உன் மனமாய்
சிறந்து சிற..!

உணர்வுகள் ஒலிக்கட்டும்
உளிச் சத்தமாய்..
உள்ளங்கள் திலங்கட்டும்
ஒளிச் சிற்பமாய்...!

Friday, September 26, 2008

வாரீர்...வடம் பிடிக்க..!

ஒற்றுமை என்னும்
உறுதி மொழியை
அடித்தளமாய் கொண்டு...

சமுதாயமெனும்
தலையாய தூண்களை
நிலை நாட்டி...

மொழிகளால் மெருகூட்டப்பட்ட
மானில
கூரைகளால் வேய்ந்து...

சீரான சட்டங்களையும்,
மகத்தான மரபுகளையும்,
மனிகளாய் கோர்த்து...

மனிதம்..
நேர்மை..
பன்பாடு..
கலாசரம் போன்ற
மலர்களால் அலங்கரித்து...

வீரமெனும்
அச்சாணியை கொண்டு
விவேகமெனும்
சக்கரங்கள் நிறுவினோம்...

உறுவானது
பாரதமெனும்
அழகான தேர்..!

பன்படுத்தபட்ட தேரில்
பக்குவ படுத்தி
திரிக்கப் படாத வடமாய்
பிரிந்த நிலை சமூகம்...

இழுக்கப் படாத தேரை
இயக்கி பார்க்கும்
ஆசையில்..
திட்டமிட்டு
நுழைந்த ஆங்கிலேயன்...

பிறகென்ன,
போராட்டம்..
சிரைச்சாலை..
சிரமங்கள்.. சித்ரவதைகள்...
ஆக்கிரமத்தின்
சர்வாதிகாரத்தில்
அலைக்கழிக்க பட்டது
மனிதம்..!

கல்லுடைத்தும்..
செக்கிழுத்தும்..
சிரமங்களுக்கிடையே
நசுக்க பட்டது
நேயம்..!

பாரத தேரோடு
பரிவாரங்களையும்
பறி கொடுத்து
பரிதாபத்தில் பதறியபடி
சமூகம்..!

சூழ் நிலையை
கண்டுணர்ந்து..
வீரத்தால் வெகுண்டெழுந்து..
வீர முழக்கங்களை
முன் வைத்து,
வன்முறைகளை
பின் தள்ளினோம்...

சத்தியம் அகிம்சை
என
அற வழியில் போராடி
முயற்சித்தோம் முடிசூடினோம்..
முடிவானது
சுதந்திரம்..!

இன்று...

பொன் விழா கண்ட
மதி மயக்கம்..!
வறட்டு வாதங்களால்..
சாதி மத
பேதங்களால்..
மீண்டும்
பிரிந்த நிலை சமூகம்..!

வலுவிழக்கிறது
வடம்..!

ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்கு
கொண்டாட்டமாம்...

குதூகலிக்கும் கூத்தாடியாய்
அன்று
ஆங்கிலேயன்...
இன்று
அன்டை நாட்டுகாரன்..!

வாரீர்..
ஒற்றுமையெனும்
தேரை பற்றி பிடிப்போம்..!
ஊர் கூடி
தேரிழுப்போம்..!

புயலே...தென்றலாய் வா!

அடை மழைக்கு முன்
பெய்யும்
அழகான தூறல்...

புயலுக்கு முன்
வீசும்
புழுதி சேரா காற்று...

இடி ஓசைக்கு முன்
இமைக்கும்
இளம் மின்னல்...

கொந்தளிப்புக்கு முன்
குதூகலித்த
கடலின் சிறு அலை..!

தூறலும் தென்றலும்
மின்னலும்
அலைகளும்...
ஆழ் மனதை ஆட்கொள்ளும்..!

அழுத்தங்கள்
அடர்ந்துவிடின் அவையெல்லாம்
அழிந்து விடும்..
போராளியின் முன் புழக்க
பொற் குணங்களாய்..!

வேண்டும் மீண்டும்...
திரை கொண்ட
மறை முகத்தின்
முன் தோன்றிய மலர் முகங்கள்!

வேண்டும் மீண்டும்...
ஆயுதத்திற்கு முன்
அன்பை ஏந்திய
அழகான பூக்கரங்கள்!

வேண்டும் மீண்டும்...
சகதியாவதற்க்கு முன்
வீசிய
சந்தன வாசம்!

வேண்டும் வேண்டும்...
என்
மரணத்திற்கு முன்
இந்த மெல்லிய நேசம்..!

எங்கே சமத்துவம்...

அழகிய நகரம்
அதில்...
நவீன முறையில்
அமைக்கபட்ட குடியிருப்புகள்!

ஆங்காங்கே...
வெள்ளிக் கலசம் வின்னைத் தொட
கோவிலின்
கோபுரங்களும்...

வானத்தை
முட்டி நிற்கும்
பள்ளி வாசலின்
மினாராக்களும்...
சிலுவையை சுமந்தபடி
கிருத்துவ தேவாலயங்களும்..!

சமத்துவ இந்தியாவின்
தனித்துவம் சிந்தித்து
வியந்து நிற்கையில்-
திடீரென..
கூக்குரலும் ஓலங்கலும்,
கூடவே-
வெடிச் சத்தமும்..!

ஆரவாரம் கேட்டதில்
இறை இல்லங்களினின்றும்
பட படத்தபடி...
ஒன்று கூடி
வானத்தை வட்டமிடும்
வென் புறாக்கள்...

மன கலவரம்
அடைந்த நானும்
விசாரிக்கயில் சொன்னார்கள்.
அங்கே..
மனிதர்களுக்குள்
ஏதோ மதக் கலவரமாம்...!

உள்ள குடியிருப்புகள்
அப்படியே இருக்கட்டும்.
முதலில் உள்ளக்குடியிருப்பை
சரி செய்வோம்..!

வன்னே..வன்னே..தலைவனே..!

தேன் துளிர்க்காமலும்
தென்றலை சுவாசிக்காமலும்
பூக்காமலே
உதிரும் மொட்டுக்களாய்..
வாழ்க்கையின்
மனமறியாது,
வசந்தத்தின் மொழியறியாது
மலர் வனமெனயெண்ணி
மத வனாந்திரத்தில்
இறங்கும் மடச் சீடர்களே...

இதோ
உங்கள்
மத தலைவர்கள்
ஓர் அறிமுகம்..!

வேதங்களால் வேலியமைத்து
வீன் வாதங்களால்
இயக்கம் தொடுத்து...
இயங்கிய மனிதனையும்
செயலிழக்கச் செய்து
மேதைகளையும்
பேதைகளாக்கும்
மா மனிதர்களாம்
இன்றைய மத தலைவர்கள்...

வான் பருந்தாய்
வட்டமிட்ட மானிடனை
வழி மறித்து...
மதமெனும் மந்திரத்தால்
மனம் மருக்கச்செய்து
சிறகை ஒடித்து-அதில்
மீண்டும் இறகு அரும்பாதிருக்க
விச பூச்சுக்கள் பூசும்
நிச மனிதர்களாம்
இன்றைய மத தலைவர்கள்...

உண்மையை
உரைப்பதாய் உரை நிகழ்த்தி...
சொல்லொன்றும்
செயல் வேறொன்றுமாய்
மனித மூளையை
சல்லடையாக்கும்
சானக்கியர்களாம்
இன்றைய மத தலைவர்கள்...

தீச் சுடரை
அகல் விளக்கென
அறிமுகம் செய்து...
அறிவீனன் ஆழ்ந்த
அவகாச இடைவெளியில்
ஆக்கிரமிப்பு நடத்தி..,
அறிவுடையோனின் ஆக்கத்திறனை
அறுவடை செய்யும்
ஆன்மீகவாதிகளாம்
இன்றைய மத தலைவர்கள்...

வேதம் வகுத்த
நல்லினக்கத்தை வேரறுத்து
வன்முறையின்
நச்சு கொடிகளை
வேத கிளையில் படரவிட்டு...
நட்பை நாசப் படுத்தும்
நற்பன்பு வதிகளாம்
இன்றைய மத தலைவர்கள்...

பாசமும் பவ்யமுமாய்
பாவனை செய்யும்
இவர்களின்
பாசத் திறையை
கிழித்தெரிந்தால்..
தெரியவரும்

உள்ளே...
நாச புழுக்களின்
வேச முகாம்கள்

Thursday, September 25, 2008

முல்லையில் விழுந்த முள்.

அன்மீகத்தின்
அடித்தளத்தில்
விசக் கிருமிகள் வேறூன்றியதால்...
நுனிக்குருத்திலும்
நெரிக்கப் படுகின்றன..
நீசச்
சிலந்திகளின் வலை

செழித்து வளர்ந்த
பாரதச் சோலையில்
இன்று
குறுத்துப் புழுக்களின்
கூட்டமைப்பு.
மீறி...அறும்பும்
மொட்டுக்களை அகற்ற
வெட்டுக் கிளிகளின்
சுற்றுப் பயணம்

தேசவனத்தில் பாயும்
கலாசார நீரோடையில்...
மதத்தின் பெயரால்
மையம் கொண்ட
வன்முறைக் கழிவுகள்

நீதி மலர்ந்த
வேத பயிரில்
விசிறப் பட்ட விச விதைகள்
வேர் பிடித்த போது...
நச்சுப் பயிரின்
ஆக்ரமத்தில்
நசுக்கப் படுகிறது
மனிதமும் நேயமும்

மோகங்களின் பிரதியாய்
யாகங்களும்
தியானங்களுமானதால்...
இன்று-
ஆலயங்களும்
மடங்களும் கூட
அறிமுகமாக்க படுகிறது
ஆயுத கிடங்குகளாய்

போற்றத் தக்க
மார்க்கங்களே
மதமாய் மாறியதாலே...
மானுடம்,
மதத்தை வாங்கிட
மதியை விற்றபோது
மலிவானது
உயிரின் விலை

முடிவுறாத
வார்த்தையின் நடுவே
முடமாய் விழுந்த
முற்று புள்ளிகளாய்...
முன்னுறையே
இன்னும் முழுமையாகாத
நிலையில்,
சில
முகமற்றவர்களால்
எழுத படுகிறது..
என் தேச சரிதத்தின்
முடிவுரைகள்

எண்ணத் தோன்றுகிறது.
ஆம்..
எண்ணத்தான்
தோண்றுகிறது..,
முகவரியில்லாத-சில
முதுகெலும்பற்றவர்களுக்கு
முட்டுக் கொம்பாய்தானோ
என் பாரதமென்று.

இன்றைய உலகம்

உலகியலைக் கண்டு
இங்கே-சில
உண்மைகளை
சொல்ல வந்தேன்..

அடிப்படையில் அழகியல்தான்
அரசியலும்...
ஆன்மீகமும்...

அவரவர் தம் கொள்கைகளை
அறவழியில் கொண்டு சென்றால்
அவனியெங்கும் நரகியலாய்
நாம் காண கண்டிடுமா..

அழகான விழாக்களில்
அடிதடிகள் நிகழ்வதுவும்
அமைதியான ஊர்வலங்கள்
அலங்கோலம் ஆவதுவும்
வாக்குச் சாவடியில்
வெடிகுண்டு நிபுணர்களும்...
வணக்கத் தல நுழைவாயிலில்
ஆயுதப் பரிசோதகரும்...

தினந்தோறும் நாம் காணும்
திகிலூட்டும் செய்திகளாய்...
மனித இனம் இதுவென்றால்
விலங்கினமே மேலன்றோ...

அரசவையோ, திருச்சபையோ
அவனியிலே அவை எவையோ
வேசமிடும் பூசல்களை
வேர் பறித்தே எறிந்திடுவோம்.

நாமெல்லாம் ஓரினமாய்
நமதெல்லாம் பாரதமாய்...
நாளெல்லாம் குதூகலமாய்
நற்புடனே வாழ்ந்திடுவோம்.

கா[அ]வலர்கள்

கஞ்சி மடிப்போடு
விறைப்பாய் நிற்கும்
காக்கிச் சீறுடையில்..

கம்பீரமாய்
நெஞ்சை நிமிர்த்திய
நிலையில்-சில
காவலர்கள்.

உள்ளே...
கசங்கிப்போய்,
மடிந்துக் கிடக்கும்
மாமுல் வேட்டையின்
காகிதக் குப்பைகள்.

பாவத் துளிகள்

அவள்
ஒழுக ஒழுக
வழங்கிக் கொண்டிருந்தாள்
தன் அழகை..

அவன்
மருகி மருகி
பருகிக் கொண்டிருந்தான்
அந்த நிலவை..

கடைசிச் சுற்று
முடிந்து,
கூடியிருந்த
உண்ர்வுச் சங்கிலிகள்
அகன்று விலகும்போது...

அறுந்து விழுந்த
ஆக்கத் துளிகளின்
அலறல் ஒலி கேட்கிறது
அந்த...

விலைமகளின்
கற்ப பூமியில்.

சுதந்திர தினம் [...]

பாவம்...

பறந்துவிட்டு போகட்டும்
சுதந்திரமாய்..

தேசியக் கொடிகளாவது.

Wednesday, September 24, 2008

ஆம்...நான் கிறுக்கன்.

மலரின் ரனம் அறியாமல்
பூக்கள் பல பறித்து வந்து
பாக்களாய் பறைச் சாற்றும்
புலவனையே கவிஞன்
என்றால்..
நான் கவிஞன் அல்ல...

பெண்ணின் மனம் புரியாமல்
போகப் பொருளாக்கிவிட்டு
புற அழகை
பிதற்றி நிற்கும் பித்தனையே
புலவன் என்றால்..
நான் புலவனும் அல்ல...

புரியாத தீட்டல்களை
புது ஓவியம் என்பதைபோல்..
புழங்காத வார்த்தைகளை
புகுத்துவதே
கலை என்றால்..
நான் கலைஞனும் அல்ல...

சமூக அவலங்களை,
சமுதாய சருக்கள்களை,
சரமாறியாய் இயம்பி நிற்க..
இயந்திர வாழ்வுதனில்
இதற்கெடுத்தான் நேரமென..

இவன் யாரோ
கிருக்கன் என்றால்..
ஆம்..நான் கிருக்கன்.

முன்னுரையாய்...என்னுரை...

கயமைகளை கடைந்தெடுத்து
கவியால் அதை
கொலு பிடித்து
கழுவிலேற்ற வந்து நிற்கும்
கடமையுள்ள குடிமகன் நான்...

குலவிளக்காம் பெண் அவளும்
கொப்பளித்த குமுறல்களை
கொக்கரித்து வந்து
நிற்கும்
கொழுந்து விட்ட
தீப்பந்தம் நான்...

மார்க்கம் தந்த நன்னெறியை
மாற்றி எங்கும்
மத வெறியாய்
ஆக்கி விட்ட விசமிகளை
அடையாளம் காட்ட வந்தேன்...

சமத்துவமாய் நாமிருக்க-அதில்
சாதி மதம்
கால் பதிக்க
கலைந்துவிட்ட ஒற்றுமையை
கவியாலே மீட்டு வந்தேன்.

Tuesday, September 23, 2008

வாழ்த்துக்கள்

வசந்தவாசல்

வி களத்தூர் சலீம் ஆகிய நான்

எனது எண்ணக் கருத்துக்களை

உருவாக்க ஏற்படுத்தியுள்ள தளம்

www.vasanthavaasal.blogspot.com

உங்களது கருத்துக்கள்
ஆலோசனைகள் அனைத்தையும் தந்து என்னை உற்சாகப்படுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணையத்தில் ஆரம்ப மாணவனாக
இருக்கும்
எனக்கு தொழில் நுட்ப ரீதியாகவும்
ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்

தொடருங்கள் தொடர்வோம்

மிக்க அன்புடன்

வி.களத்தூர் சலீம்
00971 50 4298716

vasanthavaasal1@gmail.com
vasanthavaasal@yahoo.com