Saturday, October 11, 2008

நாட்டின் வளம்..(நட்பும்,நல்லுறவும்)

ஆற்றங்கரை ஆல விழுதின்
தூளியாட்டத்தில்
தூக்கி விட
தோள் தந்ததில்
துவங்கிற்று
எங்கள் தோழமை..

ஆற்று மணலில்
ஊற்று பறித்து..
கலங்கள்களை
கையால் இரைத்து
முத்தாய்...
தெளிந்த நீரில்
முகம் கண்டோம்
முழு நிலவின்
முதல் பிறையாய்...

காலை பொழுதின்
காணிக்கையாய்..
புல் வெளியின்
உச்சி முகர்ந்த பனிப்பூக்கள்
பாதம் தொட..
சில்லிடும் பரவசத்தில்
சிலாகித்து சிறகடித்தோம்
நட்பாய்..

மாமர அணிலோடும்..
மரங்கொத்தி கிளியோடும்..
மாம்பூவிடை வடுவோடும்..
அதிலாடும் காற்றோடும்
கலந்து கதை பேசி
நட்பின் மொழியறிந்தோம்...

மதம் மறந்து
இருபாலின் இனம் மறந்து
அகத்திரை இடைவெளி க்ளைந்து
நட்பின்பால் இறுகினோம்
நட்பே பாலாய் பருகினோம்...

திருவிழா காலங்களில்
பெரும் விழா எமதாகும்.
நடப்பதெல்லாம்
மதச் சடங்கு..
நட்பாய்-அதில்
எம் பங்கு பல மடங்கு...

அம்மனுக்கு அர்ச்சணையாம்
பூ பறிக்க
எனை அழைப்பாள்
அகம் மகிழ துணை செல்வேன்..

கார்த்திகை திருவிளக்காம்
நெய் அகலில் அவள் வார்க்க
அதில்
தீபவொளி ஏற்றிடுவேன்...

தை திருநாள் வந்துவிடின்
இனிமை பொங்க
வலம் வருவோம்-இனிய
கரும்பு சுவையுடனே...

என் வீட்டு
பிரார்த்தணைகளில்
அவள் கலந்து..
கையேந்தி வழி மொழிவாள்
தலை போர்த்தி
வழிபடுவாள்...

அயோத்தியில் மசூதி
அரக்கர்களால் தகர்க்கபட்ட
இருள் செய்தி அறிந்திடவே
உயிர் துடிக்க வலி கண்டாள்
மணம் இடிந்த நிலை கொண்டாள்...

போர் தொடுக்கும்
மணங்களை வென்று
பூ தொடுப்பதே
நட்பின் வேதம்...

அகிலத்தின் அகராதியில்
ஆணும் பெண்ணும்
பஞ்சும் நெருப்புமாம்..

நனைந்த பஞ்சும்
அணல் கக்காத
அகல் விளக்குமாய்..
பக்கத்தில் இருந்தும்
பத்திக் கொள்ளவில்லை நாங்கள்...

திட்டு திட்டாய்
தேங்கி கிடக்கும்-காம
கருங்குட்டைகளுக்கு அப்பால்..
கட்டுடைந்த கடலாய்
எங்கள் நட்பின் சமுத்திரம்...

வலம் வரும்
நவ கிரகங்களுக்கெல்லாம்
சிகரமாய்...
வானத்தின் கூரையாம்
எங்கள்
நட்பின் உயரங்கள்...

நாங்கள் நடையால்
அளந்த மண்ணும்..
நட்பால் பதித்த
கால்சுவடும்..
பாறையில் பொறித்திட்ட
காரை எழுத்துக்களும்...
காலத்தால் அழியாமல்
கவி பாடும்..
நட்பே உயர்வென
கதை பேசும்..!

மத இன
பேதங்களுக்கு தாழிட்டு,
நட்புக்கு..
தடம் அமைக்க
தளம் காண்போம்..
நாட்டின் உயர்வுக்கு
வழி காண்போம்..!

1 comment:

சை.பைஜுர் ரஹ்மான். said...

ரோம்ப நாளக உங்க வலைப்பதிவில் புதிய NEWS கானவில்லையே.எண்ண காரணம் சலிம் பாய்.