Sunday, September 28, 2008

உளிச் சத்தம்

நேற்றை துலக்கு
இன்றை துவக்கு
உனை இயக்கு...
நேற்றைய வீழ்ச்சியில்
நாளைய வெற்றியை படி..!

தோல்வியை தொடு
துயரங்கள் தீண்டு
எழு...
மீண்டு வந்து
உயரங்கள் காண்..!

கேள்விகள் புணை
வேள்விகள் சிதை
சிந்தி...
புதிர்களை உடைத்து
விடைகளை உதிர்..!

ஆக்கங்களை அறிவால் ஆழ உழு
உணர்வுகள் விதை
வேர் விடு...
மனித இதயங்கள் இறங்கி
மலராய் சிரி..!

உன்னை முறை படுத்து
உன் செயல் நெறி படுத்து
செயல் படு...
விதியை வழி நடத்தி
விதியின் விதியாகு..!

மனதை தாழிடு
மதியை தூரெடு
பின் திற...
வாழ்வியலின் வரை படத்தில்
உன்னியல் தேடு..!

முன்னோருக்கு வழிபடு-அவர்தம்
பேதமைக்கு முரண்படு
புறப்படு...
சமூகம் பயணித்த
தேய் பழுதை சீர் செய்..!

மூடத்திரையை கிழித்தெறி
மடமை கூரையை பிரித்தெறி
வானம் பார்...
மூடிக்கிடக்கும்
உன் விடியலை திற..!

மதங்கள் அகற்று
மனிதம் பேனு
வேகம் விரை...
புராணங்களை புறக்கணித்து
புது வேதம் எழுது..!

சாதிகள் ஒழி
சமத்துவம் மொழி
பேதமழி...
புரட்சிகள் ஏற்றி
புதிய பாரதம் செய்..!

தாய் மண் நேசி
தலைவர்களை வாசி
மரபுகள் படி...
எத்தேசம் சென்றாலும்
இந்தியனாய் நில்..!

ஒற்றுமை ஓது
நட்பை போதி
பன்பை பழக்கு...
தீண்டாமைக்கு தீயிட
தீச்சட்டி எடு..!

சொல் அம்பு தவிர்
பகமை நான் அறு
சினவில் நிமிர்...
போர்களம் அழித்து-மனதை
பூவணமாக்கு..!

ஆயுதம் முறி
யுத்தங்கள் வெறு
அகிம்சை ஏந்து...
அம்புகள் தவிர்த்து...
அன்பால் வெல்..!

உன்னிலை மற
உள் மனம் திற
பொதுவாகு...
நான் என்ற அகம் கலைந்து
நாம் என்ற சுகம் உணர்..!

முழக்கங்கள் விடு
முயற்சியால் தொடு
நம்பிக்கை நடு...
நாளையை படைக்க
இன்றை நீ விதை..!

உன் கை நம்பு
உண்மை உன் பலமாக்கு
உழை...
வெற்றிச் சிகரத்தை
எட்டி பிடி..!

எளியோர் துயர் உள் வாங்கு
அவரிடத்தில் நீயாய் கொள்
தோள் கொடு...
உன் நலம் துறந்து
பிறர் நலம் பேனு..!

ஆழ் மனம் இறங்கு
மிருகங்கள் விரட்டு
செப்பனிடு...
மான்புகள் ஓங்க
மனிதங்கள் நடு..!

தேக்கங்கள் அகற்று
நீக்கங்கள் செய்
வழிந்தோடு...
கடந்து காட்டாறாகி
உய்ந்து ஊற்றாகு..!

சிந்தையை தீட்டு
விந்தைகள் செதுக்கு
தீயவை சிதை...
சிற்பி நீயாய் சிற்பம் உன் மனமாய்
சிறந்து சிற..!

உணர்வுகள் ஒலிக்கட்டும்
உளிச் சத்தமாய்..
உள்ளங்கள் திலங்கட்டும்
ஒளிச் சிற்பமாய்...!

No comments: